முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை [விளக்கம் ÷3] முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை

பண்ணையார் பார்த்தசாரதியின் நிலத்திற்கு பக்கத்தில் பழனியாண்டியின் நிலம் இருந்தது. பண்ணையார் அந்நிலத்தில் கத்தரி வெண்டி தக்காளி மிளகாய் போன்ற பயிர்களை பயிரிட்டு இருந்தார்.
பழனியாண்டி தன் நிலத்தில் பூசணிக்காய் பயிரிட்டு இருந்தான்.
தேவையான அளவு தண்ணீர் பாய்ச்சியும், உரங்களை போட்டும், முறையாக பராமரித்தும், பண்ணையாரின் பயிர்களில் ஒரு செடி கூட பூ பூக்கவில்லை. பல செடிகள் துவண்டு தலையை தொங்கப் போட்டுக் கொண்டிருந்தன. பல செடிகள் வாடி கருகி விட்டிருந்தன. பழனி யாண்டியின் நிலத்திலோ சாம்பல் நிறத்தில் பூசணிக்காய்கள் பெரிது பெரிதாக காய்த்து நிலம் முழுவதும் பரவிக் கிடந்தன. அதைப் பார்த்த பண்ணையாருக்கு வயிறு பற்றி கொண்டு எரிந்தது. கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது. எனினும், அந்த சாம்பல் நிறத்தில் நிலம் பூராவும் தெரிந்த அந்த பூசணி காய்களில் ஒன்றை சமைத்து உண்ண வேண்டும் என்ற ஆசை பண்ணையாருக்கு வந்தது.
ஒரு நாள் பண்ணையார் தன் வயல் வரப்பின் மீது நின்று சுற்று முற்றும் பார்த்தார். எங்கும் ஆள் அரவமோ, மனிதர்கள் நடமாட்டமோ தெரியவில்லை. திடீரென பழனியாண்டியின் நிலத்தில் இறங்கி ஒரு பெரிய பூசணிக்காயை பறித்து, அதை துண்டால் மறைத்து, லாவகமாக எடுத்துக் கொண்டு வந்து சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது குதிரை வண்டியில் ஏற்றி வைத்துவிட்டு நிமிர்ந்தவர் ஒரு கணம் அதிர்ந்து போனார்.
அதற்குக் காரணம் பரதேசி பெருமாள் தான்..! பூசணிக்காய் பறித்ததை யாரும் பார்க்கவில்லை என்ற தைரியத்தில் இருந்த பண்ணையார் பூசணிக்காயை வண்டியில் வைக்கும் போது பரதேசி பெருமாள் பார்த்து விட்டான் என்பது அப்போதுதான் அவருக்கு தெரிந்தது
பெருமாள் ஒவ்வொரு ஊரிலும் ஒரு வாரம் தங்கி பிச்சை எடுத்து உண்பான் எட்டாவது நாள் அடுத்த ஊருக்கு கிளம்பி போய் விடுவான். "இந்தப் பரதேசிப் பயல் ஊருக்குள் சென்று நான் பழனியாண்டியின் தோட்டத்திலிருந்து பூசணிக்காய் திருடினேன் என்று உளறி கொட்டி விட்டால் என்னுடைய மானம், மரியாதை என்னாவது..?' என்ற பயம் பண்ணையாரை தொற்றிக் கொண்டது
'யாரிடமும் சொல்லாதே..!' என்று அந்த பரதேசியிடம் சொல்ல முடியாது அப்படி சொன்னால் இன்னும் வீம்பாக ஒவ்வொரு வீடாக சென்று பூசணிக்காய் திருடியதை சொல்லி விடுவான் என்ற குழப்பம் உண்டானது பண்ணையாருக்கு...?
பண்ணையார் ஒரு முடிவுக்கு வந்தவராய், வண்டியில் ஏறி அமர்ந்தார். வண்டியை பங்களாவுக்கு விரட்டினார். பண்ணையாரின் வண்டி விரைவதையே பார்த்துக் கொண்டு மரத்தடியிலேயே நின்று கொண்டிருந்தான் பரதேசி பெருமாள்.
அவனது மனம் இப்படி யோசித்தது.
"பண்ணையார் ஒரு பூசணிக்காயைத் திருடி விட்டார் என்று ஊருக்குள்ளே சென்று சொன்னால் ஊரில் யாராவது நம்புவார்களா? ஏழை சொல் அம்பலம் ஏறுமா? அவரே பண்ணையார், அவரா ஒரு பூசணிக்காயைத் திருடி இருக்கப் போகிறார்? நீ பொய் சொல்லுகிறாய் என்று நமக்குக்கிடைக்கும் பிச்சை நின்று போனால் நாமல்லவா பட்டினி கிடக்க வேண்டும்..அதுவும் ஒருவாரம் இந்த ஊரில் இருந்தாக வேண்டுமே! சரி. கடவுள் விட்டவழி. வாயை மூடிக் கொண்டு மவுனமாக நாம் வந்த வேலையை மட்டும் பார்ப்போம்' என்றுமுடிவெடுத்து, மெதுவாக ஊருக்குள் நுழைந்தான்.
அங்கே-
முச்சந்தியில் பண்ணையார் வீட்டு வேலைக்காரன் நின்று கொண்டு, "இதனால் சகலமானவர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால், இன்று முதல் நான்கு நாட்களுக்கு ஊரில் உள்ள அனைவருக்கும் பண்ணையார் விருந்து கொடுக்கிறார். இன்று கீழைத்தெரு, நாளை மேலைத் தெரு, மூன்றாம் நாள் வடக்குத் தெரு, நான்காம் நாள் தெற்குத் தெரு. எல்லாரும் தவறாம வந்திருந்து விருந்து சாப்பிட வேணும். இது பண்ணையார் உத்தரவு!'' என்று அறிவித்துக் கொண்டிருந்தான்.
ஊர் மக்கள் ஒருவரை ஒருவர் குழப்பத்தோடு பார்த்துக் கொண்டனர். "என்ன சங்கதி? ஏன் பண்ணையார் திடீர்னு ஊர் மக்களுக்கு விருந்து கொடுக்கிறார்னு' ஒருவரை ஒருவர் பார்த்துக் கேட்டுக் கொண்டனர். யாருக்கும் ஒன்றும் தெரியவில்லை.
பரதேசி பெருமாள் மட்டும் பூடகமாக மனதிற்குள் சிரித்துக் கொண்டான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெருவாக நாலு நாளும், நாலு தெரு மக்களும் பண்ணையார் வீட்டுக்குச் சென்று வயிறு நிறைய விருந்து சாப்பிட்டு விட்டு வந்தனர்.
பரதேசி பெருமாள் மட்டும் அந்தப்பக்கமே தலைகாட்டவில்லை. ஒவ்வொரு நாளும் விருந்துக்குப் போகாத தெருவில் பிச்சையெடுத்து உண்டு பசியை தீர்த்துக் கொண்டான்.

"ஏம்பா! பண்ணையார் வீட்டுல விருந்து கொடுக்கறாங்களே, போய் அங்க சாப்பிடக் கூடாதா?'' என்று கேட்டவர்களிடம்,
""தாயே! அந்த விருந்து ஊர்க்காரங்களுக்குத் தான். ஊர் ஊராச் சுத்துற பரதேசிக்கில்லை!'' என்றான்.
""என்னமோ போ! நீயும் உன் வக்கணையும்!'' என்று சொல்லிக் கொண்டே பரதேசிக்குப் பிச்சை போட்டனர்.
பரதேசி அந்த ஊரிலிருந்து அடுத்த ஊருக்குப் புறப்பட்டுப் போகும் போது, வழியில் பண்ணையார் எதிர்ப்பட்டார்.

பண்ணையாரைப் பார்த்ததும் பரதேசிக்கு சிரிப்பு பொங்கிக் கொண்டு வந்தது. குலுங்கி குலுங்கிச் சிரித்தான்.

பண்ணையார், ""ஏண்டா! பரதேசி நாயே! எதுக்குடா என்னைப் பார்த்துச் சிரிக்குறே?'' என்றார்.
"இல்லை! ஒரு முழுப் பூசணிக்காயை திருடிட்டு, அதை சோத்தைப் போட்டு மறைச்சிருக்கியே! சிரிக்காம என்ன செய்ய..?'' என்றான் பரதேசி.
பண்ணையார் உறைந்தார். முழுப்பூசணிக்காயை சோத்துல மறைக்க முடியுமா என்ற பழமொழி இப்படித்தான் உருவானது
[நன்றி: இணையதளம்]
ச்சிகளும்:

Comments

Popular posts from this blog

அந்த ஊரிலயே வயசான ஒரு கிழவியை சாட்சியா வச்சு, விசாரிச்சுக் கிட்டிருக்காங்க.

உதட்டுக்கும் உள்ளத்துக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்..!

இல்லாத போது தேடப்படும். தேடாமல் கிடைக்கும் போது அலட்சியம் செய்யபடும்..!!