பாவத்தில் பங்கு..!!

 

ஒரு காட்டில் ஒரு மகரிஷி, தவத்தில் இருந்தார். பசி எடுக்கும் நேரம் கண்ணைத் திறக்காமல் தினமும் ஒருமுறை கையை நீட்டுவார்.
கையில் யாராவது எதையாவது போட்டால், அது என்ன ஏதென பார்க்காமல் விழுங்கி விடுவார்.
இவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, அங்கே வந்த பக்தர்கள் கனிகள், அப்பம் முதலியவற்றை தருவர். அவர் அதை அப்படியே வாயில் போட்டுக் கொள்வார். இதனால் புண்ணியம் சேருமென கருதினர்.
ஒரு நாள் அந்நாட்டின் அரசன் அந்தக் காட்டுக்கு வேட்டைக்கு வந்தான். அப்போது மகரிஷி இருந்த இடத்தை அடைந்தான். அன்று மகரிஷியை பார்க்க பக்தர்கள் யாரும் வரவில்லை.
அந்நேரத்தில் மகரிஷி கையை நீட்டினார். அவரை பரிகாசம் செய்யும் நோக்கத்தில், மன்னன் தான் வந்த குதிரை போட்ட சாண உருண்டையைப் போட, மகரிஷியும் வாயில் போட்டுக் கொண்டார்.
மன்னன் சிரித்தபடியே போய் விட்டான்.
மறுநாள் முனிவர் ஒருவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்தவர் அவர். அவர் மன்னனிடம் “மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு குதிரைச் சாணம் கொடுத்தாய் இல்லையா?
அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் சென்று சேர்ந்ததும் அதை உண்ண வைப்பார்கள்..!” என சொல்லி விட்டுச் சென்றார்.
மன்னன் நடுங்கி விட்டான். தர்மம் செய்து, தன் பாவங்களை குறைக்க முடிவெடுத்தான். அரண்மனை நந்தவனத்தில் ஒரு குடில் அமைத்து தங்கினான்.
இளம்பெண்களை வரவழைத்து அவர்களின் திருமணத்திற்குரிய நகை, பணம் கொடுத்து, பாவம் செய்வதின் கெடுதல் பற்றி எடுத்துக்கூறி அனுப்பி வைத்தான்.
இதை அவ்வூரில் சிலர் வேறு மாதிரியாக கதை கட்டினர். “மன்னன், இளம்பெண்களை தவறான நோக்கில் வரச் சொல்லுகிறான். தவறுக்கு கூலியாக நகை, பணம் தருகிறான்..” என்றனர்.
ஒருநாள், ஒரு பெண்
பார்வையற்ற தன் கணவரை அழைத்து வந்து அரசனின் குடில் முன்பு நின்று பிச்சை கேட்டாள். அந்த கணவன்
“நீ இப்போது யார் வீட்டு முன்பு நிற்கிறாய்?” எனக் கேட்டார்.
“அரசன் வீட்டு முன்பு..” என்றாள் அந்தப் பெண்.
“ஓ! தானம் கொடுப்பதாக சொல்லிக் கொண்டு பெண்களின் கற்பைச் சூறையாடுகிறானே அவன் வீட்டு முன்பா..?” என்றார் அந்த பார்வையற்றவர்.
அந்தப்பெண் அவரது வாயைப் பொத்தினாள்.
“அன்பரே! என் கற்பின் சக்தியால் நான் முக்காலத்தையும் உணர்ந்தவள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
இந்த மன்னன், ஒரு மகரிஷிக்கு குதிரை சாணத்தைக் கொடுத்தான். அது நரகத்தில் மலையளவாக குவிந்து, இவன் உண்ணுவதற்காக தயாரானது. அவ்விஷயம் இவனுக்குத் தெரிய வரவே, இவன் கன்னியருக்கு தர்மம் செய்து, நற்போதனைகளை செய்தான். ஆனால் இவனை பற்றி தவறாகப் பேசி, அவனுக்காக குவிக்கப்பட்டிருந்த சாண மலையில், ஒவ்வொரு கவளமாக ஒவ்வொருவரும் பங்கிட்டு கொண்டனர்.
கடைசி கவளம் மட்டும் பாக்கியிருந்தது. இவனைப் பற்றி தவறுதலாக பேசி, அதை நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள். அடுத்த பிறவியிலும் பார்வையற்றே பிறப்பீர்கள்” என்றாள்.
நீதி:
தவறு செய்தவர்கள் திருந்தும் முயற்சியை விமர்சிக்கக் கூடாது. அப்படி செய்தால் அவன் செய்த பாவங்களை பங்கு போட்டு கொள்ளும் நிலைமை ஏற்படும்..!!
+++++++++++++++++++
மனிதனின் வெற்றிக்கு பின்னால்..!



ஒரு பைத்தியக்கார கோடீஸ்வரன் ஒரு முதலைப் பண்ணைக்கு பார்வையாளராக போயிருந்தான்.
திடீரென ஒரு முட்டாள்தனமான அறிவிப்பை வெளியிட்டான். அதாவது இந்த முதலைகள் நிறைந்த குளத்தை உயிருடன் நீந்தி கடப்பவருக்கு ரூபாய் பத்து லட்சம் தருவதாக கூறினான்.
அப்படி நீந்தும் போது முதலைகள் தாக்கி இறந்து போனால் அவரது மனைவிக்கோ அல்லது உறவினருக்கோ ஐந்து லட்சம் ரூபாய் தந்து விடுவதாகவும் கூறினான்.
எல்லோரும் திகைத்துப் போய் வெகுநேரம் அந்த குளத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று ஒரு தைரியசாலி குளத்தில் குதித்து நீந்த தொடங்கினான். முதலைகள் அவனை விரட்டத் தொடங்கின.
அவன் உயிரைக் கையில் பிடித்து கொண்டு வேகமாக நீந்தி அக்கரையை அடைந்து விட்டான்.
அந்த பணக்காரனும் பேசியபடியே பத்து லட்சம் ரூபாயை உடனே தந்து விட்டான்.
வாயெல்லாம் பல்லாக தான் இருந்த இடத்துக்கு திரும்பி வந்த அந்த தைரியசாலி தன் மனைவியிடம் மெதுவாக "இப்படி வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கும் போது தள்ளி விட்டுட்டியே. நான் செத்திருந்தா என்னாகி இருக்கும்..? என்று கேட்டான்
மனைவி அமைதியாக "அப்போதும் எனக்கு ஐந்து லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும்..!". என்று சொன்னாள்.
நீதி:
ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னாலும் கண்டிப்பாக ஒரு பெண் இருப்பாள்

Comments

Popular posts from this blog

அந்த ஊரிலயே வயசான ஒரு கிழவியை சாட்சியா வச்சு, விசாரிச்சுக் கிட்டிருக்காங்க.

உதட்டுக்கும் உள்ளத்துக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்..!

இல்லாத போது தேடப்படும். தேடாமல் கிடைக்கும் போது அலட்சியம் செய்யபடும்..!!